தமிழகம்

நாளை 114-வது ஜெயந்தி விழா பசும்பொன் தேவரின் கொள்கையை போற்றுவோம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி விழாவில் அவரது கொள்கைகளையும், பெருமைகளையும் போற்றி பாதுகாப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘தேசியமும் தெய்வீகமும் எனதுஇரு கண்கள்’ என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த உத்தம தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் விளங்கியவர். குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து 17 ஆண்டுகள் போராடி தமிழகத்தில் அந்த சட்டத்தை அறவே அகற்றியவர்.

கருணையும், ஈகையும், வீரமும்,எளிமையும் கொண்ட மறக்க முடியாத தலைவராக விளங்கியவர். இந்து தாயின் வயிற்றில் பிறந்து, இஸ்லாமியரின் மடியில் தவழ்ந்து, கிறிஸ்தவர் அரவணைப்பில் கல்வி கற்று, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தளபதியாய் வெற்றி வாகை சூடினார்.

அதிகார ஆசை இல்லை

‘ஆளுவதற்கு எனக்கு திறமைஇருக்கிறது. ஆனால், அதிகார ஆசை எனக்கு இல்லை’ என மறுத்தார். 55 ஆண்டுகள் வாழ்ந்தாலும், அதில் பெரும்பகுதியை மக்களுக்காக, நாட்டுக்காக சிறையிலேயே கழித்தார். தனக்கு சொந்தமான 32 கிராமங்களில் உள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து வகுப்பினருக்கும் அன்புப் பரிசாய் வழங்கிய அவரது கருணை உள்ளத்தை நினைத்து போற்றுகிறோம்.

நந்தனத்தில் சிலை

மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள், சேவைகளை போற்றும் விதத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1994-ல் சென்னைநந்தனத்தில் அவருக்கு வெண்கலச் சிலை அமைத்தார். 2010-ல்தேவர் சிலைக்கு 13 கிலோ தங்கக் காப்பை அணிவித்தார்.

தேவரின் 114-வது ஜெயந்திவிழாவில் அவரது கொள்கைகளையும், பெருமைகளையும் போற்றி பாதுகாப்பதுடன், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க தேசியமும், கலாச்சாரமும் தழைத்தோங்க, நாட்டு மக்களிடையே மத, இனமோதல்கள் குறைந்து சகோதரத்துவம் வளர, குடும்ப ஆட்சியின் வன்முறை கலாச்சாரம் ஒழிய உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT