தமிழகம்

ஆளுநர் மீது குற்றம்சாட்டும் கூட்டணி கட்சிகள்.. மவுனம் காக்கும் ஆளும் திமுக: மத்திய பாஜக அரசுடன் திமுக இணக்கம் காட்டுவதாக காங்கிரஸ் அதிருப்தி

எம்.சரவணன்

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆளும் திமுக மவுனமாக இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்.18-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்கும் முன்பே, ‘‘ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியை அதுவும், உளவுத் துறையில்பணியாற்றிய ஒருவரை ஆளுநராக நியமிப்பது உள்நோக்கம் கொண்டது’’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், ஆளுங்கட்சியான திமுக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாகவே இருந்தது.

ஆளுநராக பதவியேற்றதும் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.ரவி, ‘‘அரசமைப்பு சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள விதிகளின்படி செயல்படுவேன்’’ என்றார். பதவியேற்ற சில நாட்களிலேயே தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த 12-ம் தேதி ஆளுநரை சந்தித்த தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை, ‘‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட திமுக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனு அளித்தார். அடுத்த நாளே, ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

கடந்த 20-ம் தேதி ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘‘9 மாவட்ட ஊரகஉள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனு கொடுத்தார்.

வரம்பு மீறுவதாக குற்றச்சாட்டு

இந்த சூழலில், தமிழக அரசின்சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளை திரட்டி வைத்துக் கொள்ளுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் அனுப்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்பு மீறி செயல்படுவதாகவும், மத்திய பாஜக அரசின் ஏஜென்ட் போல இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார்.

‘‘அரசுத் துறை செயலர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேச இருப்பதாக வெளியான செய்திகள் மூலம்,நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது தெரிகிறது. கடந்தகால அதிமுகஅரசுபோல ஆளுநரின் அத்துமீறல்களுக்கு இடம் தராமல், மாநில உரிமைகளை பாதுகாக்க திமுகஅரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாக இடதுசாரி கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்ட அறிக்கையில், “அரசின்பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து புதிய ஆளுநருக்கு தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அலுவல் ரீதியாக கடிதம்அனுப்பியுள்ளேன். நிர்வாகத்தில் வழக்கமான இதை அரசியல் சர்ச்சை ஆக்குவது சரி அல்ல. இதுவழக்கமான நடைமுறைதான் என்பது, அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு தெரியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் செயல்பாடுகளை திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக மவுனம் சாதித்து வருவதோடு, தலைமைச் செயலரிடம் இருந்து இப்படியொரு அறிக்கை வெளியாகி இருப்பது திமுகவின் கூட்டணி கட்சிகளிடம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஒருவர், ‘‘முந்தைய அதிமுகஅரசுபோலவே, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க திமுக அரசும் விரும்புவதாக தெரிகிறது. இது ஆரோக்கியமானது அல்ல’’ என்றார். ஆளுநர் விவகாரம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT