தேசிய மனித உரிமைகள் ஆணை யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே நேற்று முன்தினம் கவுரவக் கொலை நடந்துள்ளது. இது குறித்த செய்திகளில் பல்வேறு ஊடகங்களில் வெளி யாகியுள்ளன. தலித் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் சங்கர், உயர் சாதியைச் சேர்ந்த கவுசல்யா என்கிற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. இதனால் அந்த இளம் தம்பதியினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் உடுமலைப் பேட்டையில் இளம் தம்பதியரை 3 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சங்கர் உயிரிழந்தார். இளம் தம்பதியினர் உயிருக்கு அபாயம் இருப்பது போலீஸுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தும் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கத் தவறிவிட்டனர். தலித் சமூகத்தினர் மீதான இதுபோன்ற வன்முறை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வார காலத்துக்குள் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.