அயனம்பாக்கம் ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். இதில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகம்

3 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், திருவள்ளூர் அருகே உள்ள புலியூர், ஊத்துக்கோட்டை அடுத்த தொளவேடு ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளுக்கு, நபார்டு வங்கிதிட்டத்தின்கீழ், தலா ரூ.69.98 லட்சம் மதிப்பில், தலா 4 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் அமைக்கும் பணி, தாட்கோ மூலம் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தது.

அப்பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமதி, தாட்கோ மேலாண்மை இயக்குநர் விவேகானந்தன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் , பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏக்களான கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவின்போது, அமைச்சர் கயல்விழி செல்வராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆகவே, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT