தமிழகம்

முல்லை பெரியாறு அணை கொள்ளளவை உயர்த்த பேபி அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகனிடம் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

முல்லை பெரியாறு அணையின் தற்போதைய 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனை நேற்று நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து கோரிக்கை மனு அளித்த பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் கேரள அரசு செயல்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன.

குறிப்பாக எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழக நீராதார பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு புகழ்மிக்க சட்ட வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தோம். தற்போது ஏழு பேர் கொண்ட சட்ட வல்லுநர்களை தமிழக அரசு நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அக் குழு கடந்த ஒரு வார காலமாக முல்லைப் பெரியாரின் உரிமைகளுக்காக நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழக உரிமையை உறுதிப்படுத்துவதற்கு போராடி வருவதை தமிழக விவசாயிகள் சார்பில் பாராட்டுகிறோம். முல்லைப் பெரியாறு அணையின் 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு, பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

குறிப்பாக ஆறு வருடங்களுக்கு மேலாக தமிழக பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று வருவதற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட அண்ணா படகு இரண்டையும் கேரள அரசு அனுமதிக்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துக் கூறினோம். மும்முனை மின்சார இணைப்பு வழங்கவில்லை என்பதையும் அதை உடனடியாக பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

"இது இரண்டும் தற்போது என் கவனத்துக்கு வந்திருப்பதால் நான் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

குறிப்பாக செயற்பொறியாளர் உள்ளிட்ட அனைத்து பொறியாளர்களும் அணை பகுதியில் தங்கி பணியாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு உரிய பாதுகாப்பும் அதற்கான கேரள அரசின் அனுமதியும் பெற வேண்டும். அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு பெற முயற்சிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினோம்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கும்போது, “அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தமிழக அரசு முல்லைப் பெரியாறு உரிமையை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

SCROLL FOR NEXT