இயற்கை பேரிடர்களான மழை,வெள்ளம், புயல், சுனாமி, அதிகவெப்பத்தை கண்காணித்து மாநில அரசுகளுக்கு தெரிவித்து, இப்பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் பணிகளில் மத்திய புவிஅறிவியல் அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைச்சகத்தின் செயலராக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.ரவிச்சந்திரனை மத்திய அரசு நியமித்துள்ளது.
தேனி மாவட்டம், பத்திரகாளிபுரத்தில் பிறந்தவர் எம்.ரவிச்சந்திரன். அழகப்பா பல்கலையில் இயற்பியலில் முதுநிலை பட்டமும், புனே பல்கலையின் இந்திய வெப்பமண்டல வானிலை மையத்தில் இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
அதே மையத்தில் 1988-1997 காலகட்டத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். பின்னர் சென்னையில் தேசிய பெருங்கடல்சார் தொழில்நுட்ப நிறுவன (NIOT)முதுநிலை திட்ட பொறியாளராகவும், இந்திய தேசிய பெருங்கடல்சார் தகவல் மையத்தில் (INCOIS)விஞ்ஞானியாகவும், தேசிய துருவம் மற்றும் பெருங்கடல்சார் ஆராய்ச்சி மைய (NCPOR) இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இவர் மத்திய அரசின்புவி அறிவியல் அமைச்சகச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது: சிறுகிராமத்தில் பிறந்து, தமிழ் வழியில் பயின்று இப்பதவிக்கு வந்துள்ளேன்.அண்மைக் காலமாக மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களைவிட, இடி, மின்னலால் சிறுகச்சிறுக உயிரிழப்பது அதிகரித்துஉள்ளது. இதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம். நான் இடி,மின்னல் போன்ற பேரிடர்கள் தொடர்பாக ஆய்வு செய்துதான்முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் வானிலையை ஆய்வு செய்ய பலூன்களைப் பறக்க விடுவது குறைந்துள்ளது. இதனால் வானிலையை கணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து காலையில் மட்டுமே பலூன்கள் விடப்படுகின்றன. சென்னையில் ரேடார்பழுதடைந்துள்ளது. இதனால் நிகழ்நேர மழை கணிப்பு மற்றும் முன்னறிவிப்பு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவற்றை சரி செய்ய வாய்ப்புள்ளதா என ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, “விரைவில் மாநில வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.