தமிழகம்

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிசிஐடி முறையாக விசாரிக்கவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை தொடக்கம் முதலே சிபிசிஐடி முறையாக விசாரிக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதற்காக கூறப்பட்டுள்ள காரணம் சட்டம் மீதான மக்களின் நம்பிக்கையை அடியோடு தகர்த்துள்ளது.

பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவின் மீது தான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட பொறியாளர் முத்துக்குமாரசாமியிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கையூட்டு கேட்டார் என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் அவரை விடுதலை செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி வி.எஸ். ரவி தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குறித்தும், சட்டம் குறித்தும் நன்றாக அறிந்த எவரும் இதை ஏற்க மாட்டார்கள். முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பதை உறுதி செய்ய எத்தனையோ சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன; பல வழக்குகளில் இவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு அத்தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. ஆனால், இவற்றைக் கருத்தில் கொள்ளாது உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வருத்தமளிக்கிறது.

முத்துக்குமாரசாமி திடீரென மதியம் முடிவெடுத்து மாலையில் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கத்திலிருந்து கடுமையான மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த முத்துக்குமாரசாமி ஒரு கட்டத்தில் தமது நற்பெயருக்கு களங்கம் கற்பித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் 20.02.2015 அன்று மாலை தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

முத்துக்குமாரசாமியிடம் பணம் கேட்டு கிருஷ்ணமூர்த்தி நேரடியாக மிரட்டவில்லை... ஆனால், அவரது உத்தரவின் பேரில் பணம் கேட்டு நான் நெருக்கடி கொடுத்தேன் என்று வேளாண்துறையின் தலைமைப் பொறியாளரும், முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் இரண்டாவது எதிரியுமான செந்தில் நெல்லை நீதிமன்ற நீதிபதி முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

‘‘வேளாண் துறையில் காலியாக இருந்த 119 தற்காலிக ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ஆணையிட்டார். ஒவ்வொரு பணிக்கும் தலா ரூ.1.75 லட்சம் கையூட்டு வாங்கும்படி ஆணையிட்டார். அனைத்து மாவட்ட அதிகாரிகளும் முறையாக கையூட்டு வசூலித்துக் கொடுத்து விட்டனர். ஆனால், நெல்லை மாவட்ட அதிகாரியான முத்துக்குமாரசாமி மட்டும் நேர்மையான முறையில் பணியிடங்களை நிரப்பியதால் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்று கூறிவிட்டார். இதை நாங்கள் அமைச்சரிடம் கூறினோம். அதைக்கேட்ட அமைச்சர்,‘‘ அதனால் என்ன? பரவாயில்லை. பணி நியமனம் செய்யப்பட்ட 7 ஓட்டுனர்களிடமும் தலா 1.75 லட்சம் வீதம் வசூலித்துத் தாருங்கள்’’ என்று என்னிடம் கூறினார்.

அதன்பின் அமைச்சர் கொடுத்த நெருக்கடி காரணமாக நானே 3 முறை முத்துக்குமாரசாமியிடம் தொலைபேசியில் பேசி பணம் வாங்கித் தரும்படி கேட்டேன். இத்தகைய சூழலில் தான் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்’’ என்று செந்தில் தமது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் வாங்குவதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்தார் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை. அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஊழல் வெறியை நிரூபிக்க மேலும் பல உதாரணங்களும் உள்ளன.

மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெயசிங் ஞானதுரை என்ற அதிகாரி வழியனுப்பு விழாவில் பேசும்போது,‘‘வேளாண்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கடந்த 26.01.2015 அன்று இரவு என்னை செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நுண்ணூட்டச் சத்துக்கள் தமிழக அரசின் வேளாண்துறையில் கிலோ ரூ.60 என்ற விலையில் கிடைக்கிறது. ஆனால், இதே நுண்ணூட்டச்சத்து உரத்தை தனியாரிடமிருந்து கிலோ ரூ.120 என்ற விலையில் வாங்கும்படி அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார். அதற்கான உத்தரவில் நான் கையெழுத்திடவில்லை என்றால் எனது இட மாற்ற ஆணையில் கையெழுத்திடப் போவதாக மிரட்டினார். ஆனால், நான் பணியவில்லை’’ என்று கூறினார்.

இவ்வளவுக்குப் பிறகும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஊழல் செய்யாத உத்தமர் என கருதி விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் எந்த அடிப்படையில் தீர்மானித்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த வழக்கில் பிணை கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுக்களை தொடக்கத்தில் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அவர் மீதான குற்றச்சாற்றுகளுக்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாக கூறின. 61 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு தான் கருணை அடிப்படையில் அவருக்கு நிபந்தனை பிணை கிடைத்தது.

அவ்வாறு இருக்கும் போது அவர் மீதான புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்வது எந்த வகையில் முறையாக இருக்கும். முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கின் விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சாட்சியங்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வழக்கின் தீர்ப்பை அந்த நீதிமன்றம் முடிவு செய்ய அனுமதித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக தமிழகத்தின் மிகவும் பரபரப்பான வழக்கில் உயர் நீதிமன்றமே இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவதை ஏற்க முடியவில்லை.

நேர்மையான அதிகாரியின் தற்கொலைக்கு காரணமான முன்னாள் அமைச்சர் தண்டிக்கப்படுவதை இந்த வழக்கின் விசாரணை அமைப்பான சிபிசிஐடி உறுதி செய்திருக்க வேண்டும். அமைச்சருக்கு எதிரான இந்த அம்சங்களை சிபிசிஐடி முன்வைத்திருந்தால் அவர் விடுவிக்கப்பட்டிருக்க மாட்டார். இவ்வழக்கை தொடக்கம் முதலே சிபிசிஐடி முறையாக விசாரிக்கவில்லை. நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 5 பேருக்கு இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட நிலையில், அவர்களை சிபிசிஐடி காவல்துறை கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதியும் விடுதலை செய்யப்பட்டு விட்டார். அப்படியானால் அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு யார் காரணம்?

இவ்வழக்கின் தீர்ப்பு திருத்தப்படாவிட்டால் ஊழல்வாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். நேர்மையான அதிகாரிகளால் இனி ஊழல் கறைபடியாமல் பணியாற்ற முடியாமல் போய்விடும். எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் விடுபட்டவர்களையும் சேர்த்து மறு விசாரணை நடத்த காவல்துறைக்கு ஆணையிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT