முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

அரசுப் பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர்; கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

அரசுப் பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவர் அருண் குமார். இவர் அருகில் உள்ள சேவல்பட்டி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில், மாணவர் அருண் குமார் சமீபத்தில் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று, 17,061-வது இடமும் ஜேஇஇ மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்று 12,175-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்நிலையில், மாணவர் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன், பூவாத்தாள் தம்பதியரின் மகன் அருண்குமார், செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர். இவர், இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர் அருண்குமாரை முதல்வர் இன்று நேரில் வரவழைத்துப் பாராட்டி வாழ்த்தினார்.

எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதல்வர், அவரது மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என உறுதியளித்தார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT