கிராமப்புறங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதே உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பணியாகும்.
எனவே, உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்சி பேதமின்றி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழுத்தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அறிமுகக்கூட்டம் ராணிப்பேட்டையில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
‘தமிழகத்தில் திமுக அரசு அமைந்து 5 மாதங்கள் ஆகிறது. அதற்குள்ளாக உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அரசின் செயல்பாடுகள் உள்ளது. இதன் விளைவு தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றிப் பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையாக இதை நாம் பார்க்க வேண்டும்.
கிராமப்பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதே உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பணியாகும்.
எனவே, உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்சி பேதமின்றி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை அவர்களிடம் கேட்டறிந்து அதை நிறைவேற்றி தர வேண்டும். மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணடிக்கப்படாமல் மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அதேபோல, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உள்ளாட்சி பிரதிநிதிகள் அயராமல் உழைக்க வேண்டும்.
கிராமப்பகுதிகளுக்கு தேவையான வளர்ச்சிப்பணிகளை, புதிய திட்டங்களை அரசு அலுவலர்களிடம் தெரியப்படுத்தி அதை விரைவாக செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியப்பகுதிகளில் ரூ.64.61 லட்சம் மதிப்பில் இலவச வீடு கட்டும் பணியானைகளை பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் முனிரத்தினம் (சோளிங்கர்), ஈஸ்வரப்பன் (ஆற்காடு), திட்ட இயக்குநர் லோகநாயகி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.