செல்போன் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாகக் கூறி, ரூ.13 லட்சம் மோசடி செய்த கும்பலை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தியாகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 26-ம் தேதி, செல்போன் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து வருவதுபோல் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், ‘உங்களுடைய செல்போன் சிம்கார்டுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. 24 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்காவிட்டால் செல்போன் சேவை நிறுத்தப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அதை தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி, ஒரு எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.
தியாகு அந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர் உடனடியாக 5 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ஒரு இணையதளத்திலிருந்து, குறிப்பிட்ட செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அவர், தொடர்புடைய செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் அவருடைய வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பித்து பணம் செலுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை தொடர்புகொண்ட நபர், பணம் வரவில்லை என்று கூறி, வேறு ஒரு செல்போனில் இருந்து வேறு ஒரு வங்கிக் கணக்கு மூலமாக பணம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து தியாகு தனது மனைவியின் செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்து, அவரது மனைவியின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்பித்துள்ளார்.
இந்நிலையில், தியாகுவின் வங்கி கணக்கிருந்து ரூ.13 லட்சத்து 9 ஆயிரத்து 984 எடுக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தியாகு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொல்கத்தாவில் இருந்துகொண்டு மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீஸார் அங்கு சென்று கொல்கத்தா ஹவுரா நகரில் பதுங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்வநாத் மண்டல் (25), பாபி மண்டல் (31) மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த ராம்புரோஷாத் நாஷ்கர் (30) ஆகிய மூவரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மோசடி செயல்களுக்கு பயன்படுத்திய 20 செல்போன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கி கணக்கு அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “ செல்போன் மற்றும் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை அப்படியே உண்மை என்று நம்பி ஏமாற வேண்டாம்” என்றனர்.