பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்களை மூட வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளில், உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்கள், 68 சதவீதம் அளவுக்கு பாலில் கலப்படம் செய்யப்படுவதாக, மத்திய அரசு கடந்த 2012-ல் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.
கலப்பட பாலை விற்பனை செய்வோருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பால் பாக்கெட்டில் இருப்பது தரமானதா, கலப்படம் செய்யப்பட்டதா என தெரியாத பால் முகவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவது ஏற்புடையதாக இல்லை.
அந்தந்த மாநில அரசுகள் குழு ஒன்றை அமைத்து, வாரந்தோறும் தனியார் பால் நிறுவனங்களில் சோதனை நடத்த வேண்டும். பாலில் கலப்படம் செய்ப்படுவது உறுதி செய்யப்பட்டால், நிறுவனத்தை மூட வேண்டும். உரிமையாளரை, ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்'' என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.