புதுச்சேரியில் கோமாரி நோய் பரவும் சூழலில், அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருந்தில்லாத சூழலே உள்ளது. புகார் தந்தும் கால்நடைத்துறை கண்டுகொள்வதில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் விவசாயத்துக்கு அடுத்து பால் உற்பத்தித் தொழிலில் கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். தற்போது புதுச்சேரியில் கிராமப் பகுதிகளில் கோமாரி நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் பெருமாள் கூறுகையில், "புதுச்சேரியில் பாகூர், ஏம்பலம் தொடங்கி, பல கிராமங்களில் கோமாரி நோயினால் மாடுகள், கன்றுகள், ஆடுகள் இறந்துள்ளன. கறவை மாடுகளையும், கன்றுகளையும், கால்நடைகளையும் கோமாரி நோய் அதிக அளவில் தாக்குகிறது. குறிப்பாக வாய்கோமாரி, காள் கோமாரி, மடி கோமாரி ஆகியவை வந்து தீவனம், புல், வைக்கோல் சாப்பிடாமல் நோய்கள் தாக்கப்பட்டுள்ளன.
தாயின் மடியில் பால் குடித்தால் கன்றுக்குட்டி இறந்து விடுகிறது. இதுபோல் ஏராளமான கன்றுக்குட்டிகள் இறந்துள்ளன. கறவைப் பசுக்களும் இறந்து விடுகின்றன. கோமாரி நோய் தாக்கத்தால் கறவைப் பசுக்கள் பால் கறக்காமல் பால்மடி வற்றி விடுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளைக் கால்நடை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று வைத்தியம் பார்க்கச் சென்றால், எந்தவிதமான ஊசி, மாத்திரை தொடங்கி கட்டுப் போடும் துணிகள் கூட இல்லை என்று மருத்துவர்களும், ஊழியர்களும் கூறுகிறார்கள். மருந்துக் கடையில் மருந்துகளை வாங்கி வருமாறும் கூறுகிறார்கள். மருந்து வாங்கி வந்தாலும், ஊசி போடப் பணம் வசூலிக்கிறார்கள்.
கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டோர், கால்நடைகள் வளர்ப்போர், விவசாயிகள் எனப் பலரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். கால்நடைத்துறையிடம் புகார் தந்தாலும் அலட்சியமாக இருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "கோமாரி நோயைத் தடுக்க அரசு ஆண்டுக்கு இரண்டு முறை கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும். கால்நடை மருத்துவமனைகள் அனைத்திலும் நோய் தடுக்கும் ஊசி, மாத்திரை, கட்டுத்துணி, பஞ்சு ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோமாரி நோயினால் இறந்த கறவைப் பசுக்கள், கன்றுகள், ஆடுகளுக்கு இழப்பீடு தரவேண்டும். இதை வலியுறுத்திப் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.