தமிழகம்

தஞ்சாவூர் அருகே நெல் நடவு செய்த பெண்களிடம் சென்று நலம் விசாரித்த சசிகலா

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர், மாரியம்மன் கோயில் அருகே வயலில் நெல் நடவு செய்த பெண்களிடம் சென்று சசிகலா நலம் விசாரித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, மீண்டும் கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து நிர்வாகிகள் இடையே ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில், தென் மாவட்டங்களுக்கு ஒரு வார கால அரசியல் சுற்றுப் பயணத்தை சசிகலா நேற்று தொடங்கினார். அதிமுக கொடி கட்டிய காரில் சென்னை, தி.நகர் வீட்டில் இருந்து கிளம்பிய சசிகலாவுக்கு, ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். அவருடன் இளவரசியும் சென்றார்.

இந்நிலையில் தஞ்சாவூர் அருகே பூண்டி புஷ்பம் கல்லூரியில் இன்று (அக்.27ஆம் தேதி) டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமனாத துளசிக்கும் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொள்ள நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்த சசிகலா, தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். பின்னர் இன்று மதியம் 12 மணிக்குக் கிளம்பி பூண்டிக்குச் சென்றார். செல்லும் வழியில் மாரியம்மன் கோயில் அருகே வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களைப் பார்த்து, காரை விட்டு இறங்கி அந்தப் பெண்களிடம் சென்று நலம் விசாரித்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பூண்டிக்குச் சென்று திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு மீண்டும் புறப்பட்டுத் தஞ்சாவூருக்கு வந்தார்.

SCROLL FOR NEXT