சமத்துவபுரம் போன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சமூகத்தினருக்குமான சமத்துவ அடக்கத்தலங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம் என்று தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
’’முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் உள்ள மொழி மற்றும் மதச் சிறுபான்மையினர் வாழ்வாதாரம், பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையம் மாவட்டந்தோறும் ஆய்வு செய்து வருகிறது.
சிறுபான்மையின மக்கள் நிம்மதியாக வழிபாடு நடத்த முடியாத வகையில், வலதுசாரி மதவாத சக்திகள் தொடர்ந்து பல்வேறு வகைகளில் இடையூறு செய்து வருவதாக அனைத்து ஊர்களில் இருந்தும் புகார்கள் வருகின்றன.
பெரும்பான்மையான மக்கள் எவ்வித மத வேறுபாடுமின்றி சமாதானமாக வாழ விரும்பும் நிலையில், ஒரு சாரர் தங்களது அரசியல் செல்வாக்கை அந்தப் பகுதியில் வளர்த்துக் கொள்வதற்காக வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் முன்னெடுக்கின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு சமூக அமைதி அவசியம். எனவே, தமிழ்நாட்டில் சமூக அமைதிக்கான சூழலை உருவாக்கித் தரவேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. இதை உணர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சமத்துவ அடக்கத் தலம்
அடக்கத் தலங்களில் பல சிறுபான்மையின சமுதாய மக்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளது. குறிப்பாக, கிறிஸ்தவக் கல்லறைகள் முழுமையாக நிரம்பி, மேற்கொண்டு அடக்கம் செய்வதற்கு இடமில்லாத நிலை உள்ளது. இதையடுத்து, தனியார் இடத்தை வாங்கி, கல்லறை அமைக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வகுப்புவாத சக்திகள் இடையூறு செய்கின்றன. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வகுப்புவாத சக்திகளை யாருமே தட்டிக் கேட்காத காரணத்தில், வகுப்புவாத சக்திகள் இதுபோன்று பிரச்சினை செய்வதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகின்றன.
எனவே, சமத்துவபுரம் போன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சமூகத்தினருக்குமான சமத்துவ அடக்கத் தலங்களை அரசு ஏற்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் நேரடி மேற்பார்வையில் நிர்வகிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம். இந்தக் கோரிக்கையை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
வெள்ளை அறிக்கை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மாநிலங்களில் செய்துள்ள முதலீடுகள் மற்றும் அந்த நிறுவனங்கள் எந்த அடிப்படையில் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களில் செலவிடுகின்றன, மாநிலம் வாரியாக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு ஆகியன குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு அளிக்கும் கல்வி உதவித்தொகை கடந்த ஆண்டு 35 சதவீதம் பேருக்குக் கிடைக்கவில்லை. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கிவிடலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.
சிறுபான்மையின மக்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் என்னென்ன, பயன்பெறத் தகுதியானவர்கள் யார், மின்னஞ்சல் முகவரி, இணையதள முகவரி ஆகியன குறித்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார். அதன் பிறகு, மாநிலம் முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு அந்தக் கையேடு வழங்கப்படும்’’.
இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.