சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக அதிகரித்தது. கூமாப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தபாபு (19) சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் மல்லி அருகேயுள்ள வேண்டுராயபுரத்தில் சிவகாசியைச் சேர்ந்த வைரமுத்துக்குமார் என்பவருக்குச் சொந்தமான முன்னா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
புதன்கிழமை மாலை இந்த பட்டாசு ஆலையில் ஒரு அறையில் ராக்கெட் வெடிகளுக்கு மருந்து நிரப்பும்போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதனால், அந்த அறையும் அடுத்தடுத்து உள்ள 8 அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பற்றி 8 கட்டடங்களும் இடிந்து சேதமடைந்தன.
திருத்தங்கல் பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் (55), முனியசாமி (35) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி இறந்தனர்.
கூமாபட்டியைச் சேர்ந்த கோவிந்தபாபு (19) என்பவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 100% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.