முதல்வர் வீட்டுக்கு முன் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததால் விவசாய சங்க நிர்வாகிகளை போலீஸார் விரட்டி, விரட்டி கைது செய்தனர். இதைக் கண்டித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
மத்திய அரசு தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக வழங்கிய ரூ.1773.78 கோடியை, பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உடனடி யாகப் பிரித்துத் தர வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நீரின்றி விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், இதை மீட்டெடுக்க தென்னக நதிகளை இணைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மார்ச் 1-ம் தேதி (நேற்று) சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன் மகா தர்மப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 300 பேர் சென்னை செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த போலீஸார், நேற்று முன்தினம் இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பி.அய்யாக் கண்ணு உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் சிலரை கைது செய்து மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்து, நேற்று விடுவித்தனர்.
இதையடுத்து, சட்ட விரோதமாக கைது செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை போராட்டத்துக்கான பயண ஏற்பாடாக ரயில், வேனுக்கு விவசாயிகள் செலவு செய்துள்ள, ரூ.45 ஆயிரத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சட்டை அணியாமல் சென்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்க விவசாய சங்கத்தினர் முடிவு செய்தனர்.
இதன்படி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று சட்டை அணியாமல், வேட்டி மட்டும் அணிந்துகொண்டு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றனர். அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்திய போலீஸார், உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் விவசாயிகள் அந்த இடத்திலேயே அமர்ந்து, மண் சாப்பிடும் போராட்டத்தைத் தொடங்கினர். இதையறிந்த நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் கபிலன் அங்குவந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள், மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.