தமிழகம்

வெற்றியை நிர்ணயிப்பது இளைய தலைமுறையினரே: வைகோ கணிப்பு

செய்திப்பிரிவு

‘தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பது எந்த கட்சிகளையும் சாராத இளைய தலைமுறையினர்தான்’ என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் 3-ம் கட்ட மாற்று அரசியல் எழுச்சிப் பிரச் சாரப் பயணம் நேற்று திருவள்ளூர் மாவட் டம் ஆவடியில் தொடங்கியது. இதில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ பேசியதாவது:

ஆட்சிக்கு வந்தால் சாராயக் கடையை மூடுவோம் என 1996-ல் முரசொலியில் கருணாநிதி எழுதினார். அதன் பிறகு 10 ஆண்டு ஆட்சியில் அவர் அதைச் செய்யவில்லை. மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மதுபானக்கடைகளை மூடுவோம். தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பது எந்த கட்சிகளையும் சாராத இளைய தலைமுறையினர்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஆட்சியை விட்டு தூக்கி எறியுங்கள். இவ்வாறு வைகோ பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘‘திமுக, அதிமுக கட்சிகள் தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டுள்ளார்கள். திமுகவிலோ குடும்பமே ஊழலில் சிக்கித் தவிக்கிறது. அதிமுகவிலோ முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கித் தவிக்கிறார். மக்கள் நலக் கூட்டணி கட்சி தலைவர்கள் மீது யாரும் குற்றம் சொல்லமுடியுமா? திமுக, அதிமுக, பாமக பற்றி குற்றம்சாட்டும் தகுதி எங்களுக்குத் தான் உள்ளது’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் பேசினர்.

SCROLL FOR NEXT