நடிகர் சாய் பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை அன்று தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவுக்கு, அவர் உடன் நடித்த நடிகர்களும், அவரது நண்பர்களும் ஆழ்ந்த இரங்கலையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, தொகுப்பாளராகி, சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தவர் நடிகர் சாய் பிரசாந்த். அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், தன் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். தனது மனைவியைப் பிரிந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
சாய் பிரசாந்தின் இறப்புக்கு, அவரது நண்பர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். சாய் பிரசாந்த் தனது கடிதத்தில் அம்மா என்று குறிப்பிட்டிருந்த நடிகை ராதிகா, "ஏன் இந்த வயதில் இந்த முடிவை எடுக்க வேண்டும், என்னை இது பாதித்துள்ளது, எப்போதும் எங்கள் கண் முன் இருந்தவன், நான் எப்போதும் பேசும் ஒருவன், ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"சாய் பிரசாந்த் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அதேநேரம் இந்த அவசரமுடிவு அவசியம் அற்றது என்பது என் முடிவு" என நடிகர் விவேக் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான 'சாகசம்' படத்தில், நடிகர் பிரசாந்துடன் சிறிய வேடத்தில் சாய் பிரசாந்த் நடித்திருந்தார். "அன்புள்ள சாய் பிரசாந்த், நீ இதை செய்திருக்கக் கூடாது, எங்கள் அனைவரின் மனதையும் உடைத்துவிட்டாய்" என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
"சாய் பிரசாந்தின் இறப்பு செய்தி அதிர்ச்சியளிக்கிறது. எப்படி மனிதர்கள் தங்களை விரும்புவர்களை மறந்து அக்கறையின்றி உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்று தெரியவில்லை" என நடிகர் சாந்தனு குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சாய் பிரசாந்தின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடக்கும் எனத் தெரிகிறது.