திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. அப்பணிகள், தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில், மருத்துவ மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக தேசிய மருத்துவ குழுவினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இங்கு உரிய கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், கட்டுமான பணிகள் குறித்தும், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முதல்வராக இருந்தபோது 2011 பிப்ரவரியில் கொண்டு வந்த கொள்கை திட்டத்தின்படி கொண்டுவரப்பட்ட மாதிரி திட்டம்தான் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி. அப்போது, பல்வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்வாக ரீதியிலான ஒப்புதல், இடங்கள் தேர்வு போன்ற பணிகள் நடைபெற்று முடிந்தன.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற இந்த 5 மாதங்களில் மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு விரைந்து செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன.
புட்லூர் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்தை புதுப்பிக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து, விரைவில் துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம்கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், இணை இயக்குநர் (பூச்சியியல் வல்லுநர்) கிருஷ்ணராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.