பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு 2 போக்சோ வழக்குகளில் மட்டும் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுமட்டுமின்றி பெண்களை மானபங்கம் செய்தது உள்ளிட்ட 2 வழக்குகள் செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவசங்கர் பாபா தன் மீது போடப்பட்டுள்ள போக்சோ வழக்குகள் மீது ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி 2 போக்சோ வழக்குகளில் ஜாமீன் வழங்கினார்.
இந்த ஜாமீன் கிடைத்தும் சிவசங்கர் பாபா மற்ற வழக்குகளால் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. மொத்தமுள்ள 5 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே சிவசங்கர் பாபா வெளியில் வரமுடியும்.