தமிழகம்

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளால் சென்னையில் பழைய பேப்பருக்கு கடும் கிராக்கி: கிலோ ரூ.35 வரை விலைபோகிறது

டி.செல்வகுமார்

தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சென்னையில் பழைய பேப்பருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மட்டை, காகிதச் சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மரப் பொருட்கள், காகிதக் குழல்கள், துணி மற்றும் காகிதப் பைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியது. இதனிடையே உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், கரோனா தொற்று பரவல் காரணமாக பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. அதனால் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது கரோனா தொற்று கட்டுப்பபடுத்தப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்திருப்பது பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பில் மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கிஉள்ளனர். அதன் காரணமாக பழைய பேப்பருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மேத்தா நகரைத் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான ராமர் கூறும்போது, “மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கின்றனர். அதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என்றுகூறி, கடைக்கு வரும்போது இட்லி, தோசை போன்ற உணவுப் பண்டங்களை எடுத்துச்செல்லவும், சாம்பாருக்கும் எவர்சில்வர் பாத்திரமும் எடுத்து வரும்படி அறிவுறுத்துகிறோம்.

பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பழைய பேப்பர் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ பழைய பேப்பருக்கு ரூ.35 வரை கொடுக்கிறோம். இந்தவிலை கொடுத்தாலும் தேவையான அளவுக்கு பழைய பேப்பர் கிடைப்பதில்லை” என்றார்.

ரயில்வே காலனியைச் சேர்ந்த பலசரக்கு கடைக்காரரான ஆனந்த் கூறும்போது, “பலசரக்குகளை கட்டிக் கொடுப்பதற்கு பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக பழைய பேப்பரையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ பழைய பேப்பருக்கு ரூ.25 வரை விலை கொடுக்கத் தயாராக உள்ளோம். பழைய பேப்பர் வியாபாரிகளிடம் அதிக விலை கொடுத்து பேப்பரை வாங்க வேண்டியுள்ளது” என்றார்.

இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். மறுபுறம் ரூ.8 முதல் ரூ.11 வரை விற்ற பழைய பேப்பர்களை, பழையபேப்பர் வாங்குவோர் ரூ.17 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். அதேநேரத்தில் ஓட்டல்காரர்கள், பலசரக்கு கடைக்காரர்கள் ரூ.35 வரை விலை கொடுப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT