தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்துக்குள் நுழையவே வழிவகுக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் கல்வித் திட்டத்தை தமிழகம் ஏற்காது என்று திமுக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின்கல்வித் திட்டத்தில் உள்ள சிலஅம்சங்களை நடைமுறைப் படுத்துவது போன்ற ஆணைகளை தமிழக பள்ளிக் கல்வித் துறைபிறப்பித்துள்ளது. இது முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு நடத்துவது பற்றி சில நாட்களுக்கு முன்பு சுட்டிக் காட்டியிருந்தோம். அதற்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘இந்த திறனறிவுத் தேர்வு மதிப்பெண்கள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்’ என்று கூறியிருந்தார். இந்த திறனறிவுத் தேர்வு மூலம் மாநில உரிமைகளில் சிபிஎஸ்இ தலையிடுகிறது என்பதால் அமைச்சரின் விளக்கத்தால் திருப்தி அடைய முடியவில்லை.
அதுபோலவே இப்போது தொடங்கப்படும் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம், மத்திய அரசின் கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழையவே வழிவகுக்கும். கற்றல், கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும்உள்ள தன்னார்வத் தொண்டர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் உள்ளதை அப்படியே நடைமுறைப்படுத்துவதாகவே, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் அமைந்திருக்கிறது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரைபாடம் கற்பிக்க, 12-ம் வகுப்பு படித்தவர்களையும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பாடம் என்ற பெயரில் மாணவர்களிடம் நஞ்சை விதைக்க வாய்ப்புள்ளது.
முதல்வர் கவனத்துக்கு...
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க, உயர்நிலை வல்லுநர்குழு அமைக்கப்படும் என்றுசட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விரைவில் அமைக்கப்பட்டு, அதன்பரிந்துரைகளை செயல்படுத்தலாம். கல்வித் திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால் இதில் அவசரம் கூடாது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.