திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள உமையாள்புரம் பகுதியில் மண்ணில் புதைந்திருந்த சோழர் காலத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சிற்பம் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
உமையாள்புரத்தை அடுத்துள்ள சுண்டைக்காய் என்ற கிராமத்தில், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அகிலா மற்றும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் நளினி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சிற்பத்தைக் கண்டறிந்தனர்.
பாதிக்கும் மேலாக மண்ணில் புதையுண்டிருந்த சிற்பத்தை கிராம மக்களின் உதவியுடன் அகழ்ந்து பார்த்தபோது, அந்த சிற்பம் சோழர் காலத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சிற்பம் என்பது தெரியவந்தது.
இதனை மேலாய்வு செய்த டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் கலைக்கோவன் கூறியது:
பொதுக்காலம் 10-ம் நூற்றாண்டு கலையமைதியில் 92 சென்டிமீட்டர் உயரம், 58 சென்டிமீட்டர் அகலம், 15 சென்டிமீட்டர் கனமும் கொண்டதாக இந்தச் சிற்பம் அமைந்துள்ளது.
சடைப்பாரம் என்ற அமைப்பில் தலை அலங்காரமும், தொடையளவாகச் சுருக்கிய இடையாடையும் கொண்டு, ஒரு காலை மடித்து இருக்கையில் அமர்த்தி, மறுகாலைக் கீழிறக்கிய நிலையில் சுகாசனத்தில் அமர்ந்துள்ள சண்டிகேஸ்வரரின் கீழிறங்கிய வலதுகால் மண்ணில் புதைந்துள்ளது.
சிற்பத்தின் வலது காதில் அணிகலன் இல்லாமலும், இடது காதில் கனமான பனையோலைக் குண்டலமும், முப்புரிநூல், இடைப்பட்டை, தாள்செறி, கைவளை, கழுத்தில் அகலமான அலங்காரச் சரப்பளி ஆகியவை காணப்படுகின்றன.
வலது கையில் மழு ஏந்தி, இடது கை தொடை மீது இருத்தி, பொலிவான உருண்டை முகமும், செறிவான உடலமைப்பும் கொண்டுள்ள இந்த சிற்பத்தின் வடிப்புக் கூர்மை சிறப்பாக அமைந்துள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவராக அறியப்படும் சண்டிகேஸ்வரர் பலவிதங்களில் சிறப்புக்குரிய அடியவராவார். சிவபெருமானால் மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருமையை உடையவர். பல்லவர் காலத்தில் இருந்தே கோயில்களில் இடம்பெறத் தொடங்கிய மிகச் சில நாயன்மார்களில் சண்டிகேஸ்வரர் முதன்மையானவர். தமிழகக் கோயில்களில் இவருக்கு கோயிலின் வடக்குச் சுற்றில் தனித் திருமுன்கள் கட்டப்பட்டுள்ளன.
கோயில்களுக்குரிய கொடுக்கல், வாங்கல்கள் சண்டிகேஸ்வரர் பெயராலேயே நிகழ்ந்தமைக்கு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
இதுபோன்ற உயர்நிலைக்குரிய சண்டிகேஸ்வரரின் சிற்பம் இந்தப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதால், இந்த ஊரிலோ அல்லது பக்கத்து கிராமங்களிலோ சோழர் காலக் கோயில் ஒன்று இருந்து, காலப்போக்கில் மறைந்து போனதைக் காட்டுகிறது என்றார்