தமிழகம்

திமுகவை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம்: திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு

செய்திப்பிரிவு

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆளுங்கட்சியை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநில தலைமை நிலையச் செயலாளரும் முன்னாள் மேயருமான வி.மருதராஜ் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது: பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யத் தயாராகி உள்ளனர். நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆளும்கட்சியை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT