மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்குப் பாடங்களை நடத்தி அவகாசம் தந்து செமஸ்டர் தேர்வு நடத்துமாறு புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் மனு தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில மாணவர்- பெற்றோர் நல்வாழ்வு சங்கத் தலைவர் பாலா இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங்குக்கு அளித்த மனு விவரம்:
"2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்பிற்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல்தான் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மருத்துவப் படிப்பிற்கு தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படியும் பல் மருத்துவப் படிப்பிற்கு பல் மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படியும், பொறியியல் படிப்பிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிமுறைகளின்படியும்தான் இணையதளம் மற்றும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.
விதிமுறைகளை மீறித் தற்போது புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு முதலாமாண்டு பருவத் தேர்வை தற்போது அறிவித்துள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
ஆகையால் மேற்படி மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல் மற்றும் இதர பாடங்களுக்கு அந்தந்தத் தலைமைத் தேர்வுகளை நடத்த வேண்டும். கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் கரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இணையதளம் மூலம்தான் வகுப்புகள் நடைபெற்றன. மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் மற்றும் இதர படிப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் முதல்தான் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிலையில் மாணவர்களின் சிரமங்களை அறிந்து பல்கலைக்கழகத் தேர்வினைப் போதிய கால அவகாசம் அளித்து நடத்திட வேண்டும். இது சம்பந்தமாகப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் மாணவர்கள் தங்கள் சிரமங்களைப் பல்கலைக்கழகத் தேர்வுத் துறையிடம் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் மாணவர்களின் நலன் கருதி மேலும் மாணவர்களுக்கு அந்தந்தக் கல்லூரிகள் முழுமையான பாடத்திட்டத்துக்கான பயிற்சியை அளித்துவிட்டு, பிறகே தேர்வினை நடத்த வேண்டும்."
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.