பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் சிலம்பாட்டத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநில சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் பழைய மாரியம்மன் கோயில் சாலையில் உள்ள மாநகராட்சி புதைசாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் சென்று, நேற்று ஆய்வு செய்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல, அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் சிலம்பாட்டத்தை சேர்ப்பதற்கான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும், சிலம்பாட்டத்தை பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக, பல்கலைக்கழக அளவிலும், அதற்கடுத்து ஒலிம்பிக் போட்டிக்கும் சிலம்பத்தை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களையும், புதைசாக்கடையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.