தமிழகம்

ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறித்து 3.16 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை: பேரிடர் அபாய குறைப்பு முகமை நடவடிக்கை

செய்திப்பிரிவு

ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறித்து கரையோரத்தில் வசிக்கும் 3.16 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, பேரிடர் அபாயக் குறைப்பு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்த பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பேரிடர் மேலாண்மைக்கான பொதுவான எச்சரிக்கை நெறிமுறை மூலம் தேசிய, மாநில, உள்ளூர் அளவில் தற்போதுள்ள எச்சரிக்கை அமைப்புகளை ஒருங்கிணைத்து பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்கள் பொதுமக்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்களுக்கு ஒரே நேரத்தில் குறுஞ்செய்தி உள்ளிட்ட அனைத்து வகையிலும் உள்ளூர் மொழியில் தெரியப்படுத்தப்படுகிறது.

இந்த பொதுவான எச்சரிக்கை நெறிமுறை மூலம், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை,மாநிலத்தில் உள்ள அனைத்து தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் தொடர்பான பிற எச்சரிக்கை தகவல்களை குறுஞ்செய்தி வாயிலாக தெரியப்படுத்தி வருகிறது.

தற்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மண்டலம், பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்துக்கு வரும் உபரி நீரை அக்.25-ம் தேதி(நேற்று) ஆந்திர அரசு திறந்துவிட்டுள்ளது. இந்த உபரி நீர் தமிழகத்தின் எல்லையான ஊத்துக்கோட்டைக்கு வந்தடையும். எனவே ஆரணியாற்றின் 2 கரைகளிலும் உள்ள தாழ்வான கிராமங்களில் வசிக்கும் 87 ஆயிரத்து 954 பேருக்கு தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மூலம் குறுஞ்செய்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கொசஸ்தலையாற்றின் இரு கரைகளிலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி 2,28,092 பேருக்கு குறுஞ்செய்தி மூலம் பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT