பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பெற்றோரில் ஒருவரின் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
’’பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்துள்ளதை அதிகரிக்கும் வகையிலும், அவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு செயல்பாடுகள் மாநிலந்தோறும் செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம், பெண் குழந்தைகளின் கல்வி நிலை உயர்ந்துள்ளதாலும், குடும்பப் பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிக்க, வருமானம் ஈட்ட, சுயதொழில் புரிதல் மற்றும் வீட்டை விட்டு வெளியே பணிக்குச் செல்வதாலும், பல நேரங்களில் பெண்களுக்குத் தாமதமாகவே திருமணம் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது தாயாரின் வயது 35-ஐக் கடந்து விடும் நிலை உள்ளது. இதன் காரணமாகவும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகிறது.
பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் மற்றும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்ற கூடுதல் நோக்கங்களையும் கொண்ட இத்திட்டத்தின்படி, கல்வி நிலை உயர்ந்து, தாமதமாகத் திருமணம் நடைபெறுவதால் பெற்றோரில் ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வயது அதிகமாகிறது.
எனவே, தகுதியான பல பெண் குழந்தைகள் திட்ட பலனைப் பெறத் தகுதி இல்லாமல் போவதைத் தடுத்திடும் வகையிலும், பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்தி அவர்களின் உரிமையைக் காத்திடவும், அதிக எண்ணிக்கையில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைந்து பயனடைய வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன், முதல்வரின் ஆணையின்படி, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பதில் உள்ள வயது வரம்பினை 35-லிருந்து 40 ஆக உயர்த்துதல் அவசியமாகிறது.
அதற்கிணங்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரால், 01.09.2021 அன்று சட்டப்பேரவையில், "முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான, பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதில் உள்ள அந்த வயது வரம்பு 35லிருந்து 40 ஆக உயர்த்தப்படுகிறது" என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பின் அடிப்படையில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான, பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதில் உள்ள அந்த வயது வரம்பினை 35லிருந்து 40 ஆக உயர்த்தி அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது’’.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.