கல்வி, விவசாயம், வேலைவாய்ப்புக் கடன்களை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
''பிஎம் ஸ்வாநிதி என்பது கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தெருப்புற சின்னஞ்சிறு விற்பனையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்க மலிவுக் கடன்களை வழங்குவதற்கான சிறப்பு மைக்ரோ கிரெடிட் வசதி திட்டமாகும். இத்திட்டத்தின்படி விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பத்தாரர்கள் கோரிக்கையையும் கனிவுடன் கவனிக்க வேண்டுகிறேன்.
* தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு பல ஆண்டுகளாக சீரான அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வங்கிகள் இந்த செயல்திறனைத் தொடரவும், தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடன் கிடைப்பதை உறுதி செய்யவும் வேண்டும். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
* தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையானவை என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். 49.48 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 96.73 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
* தமிழ்நாடு அரசு வங்கிக் கடன் அடிப்படையில் மூன்று சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமீப ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 1,37,429 விண்ணப்பங்களில், இதுவரை 35.67 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.
* இந்த ஆண்டில் சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல முக்கியமான முடிவுகளை அறிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை அதிகரிக்க அரசு மாநில அளவிலான கடன் உத்தரவாத நிதியை அமைக்கும். இது சிறு நிறுவனங்களைக் காப்பாற்றுவதாக அமையும். அதனை வளர்த்தெடுப்பதாக அமையும். கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த நிறுவனங்கள் ஆகும். எனவே அதனை மீட்டெடுப்பது அரசின் முக்கியமான இலக்காக அமைந்திருக்கிறது. எனவே அரசின் இரண்டு திட்டங்களையும் வங்கிகள் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
* அதேபோல் மாணவர்களுக்கான கல்விக் கடனையும் தமிழக அரசு முக்கியமானதாகக் கருதுகிறது. மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது. அந்தக் கல்வியை அடையப் பணம் தடையாக இருக்கக் கூடாது. எனவே கல்விக் கடன்களை வழங்குவதன் மூலம் இந்த நோக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இங்குள்ள அனைத்து வங்கிகளும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
* விவசாயிகள் மாநிலத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அத்தகைய விவசாயிகளுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது, ஏன் உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும்.
* கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், இதுவரை 31.09 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7.16 லட்சம் பயனாளிகளுக்கு விரைவாக கார்டுகள் வழங்கப்பட வேண்டும்.
* உணவு பதப்படுத்தும் தொழில்களின் கீழ் 104 விண்ணப்பங்கள் வங்கிகளில் நிலுவையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குமாறு வங்கியாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெற முடியும்.
* மீன்பிடித் தொழில் என்பது நம்முடைய பாரம்பரியத் தொழில்களில் ஒன்றாகும். இத்தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். இன்று மீன்பிடித் தொழில் நவீனமாகி வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தியாக வேண்டும். இதனை வாங்குவதற்கு வங்கியாளர்கள் முடிந்த அளவிற்கு உதவிகளைச் செய்திட வேண்டும்.
* 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் 13.8.2021 அன்று தாக்கல் செய்தார். அப்போது நிதித்துறையில் ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைத்தார். அரசின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து வங்கிகளும் தங்களது கணக்கு விவரங்களை எங்களுக்கு அளித்துள்ளன. எதிர்காலத்தில் இந்த கவனத்தை இன்னும் நாங்கள் கூர்மைப்படுத்துவோம். அதற்கு அனைத்து வங்கிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
* கோவிட் தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கும் வரவிருக்கும் நாட்களில் நமக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசுடன் வங்கிகள் கைகோக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும்''.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.