சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் வசீம் அக்ரம் (41). இவர் கடந்த மாதம் 10-ம் தேதி தனது வீட்டின் அருகாமையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டுத் தனது மகனுடன் வீடு திரும்பும்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்து காவல் துறையினருக்கு வசீம் அக்ரம் துப்பு கொடுத்ததால், இந்தக் கொலை சம்பவம் நடந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனக் கட்சித் தலைமை அறிவித்தது. அதன்படி, அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வசீம் அக்ரம் மகன் மற்றும் மகளிடம் இன்று (அக். 25) நிதி வழங்கி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"வாணியம்பாடியைச் சேர்ந்த மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவிக்கிறது. உயிரிழந்த வசீம் அக்ரம் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கப்படும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
மனிதாபிமான அடிப்படையிலும், கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த நிதியுதவி வசீம் அக்ரம் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது அவரது குடும்பத்தாருக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
சிறுபான்மையினர் மக்களுக்கு அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி. வசீம் அக்ரம் கொலை வழக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தமிழக அரசு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி எங்குமே நடைபெறாமல் இருக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு கே.சி.வீரமணி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.