சசிகலாவை எதிர்த்துத்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு இன்று (அக். 25) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பில் அதிமுக செயல்படுகிறது. தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து பேசி இதுகுறித்து முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
ஓபிஎஸ் கருத்து தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சசிகலா, அவரைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அப்படி வைத்துக்கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கெனவே தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைவரும் கையெழுத்திட்டுள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் ஓபிஎஸ் இணைய முடிவெடுத்தபோது, எந்தக் காலத்திலும் சசிகலாவுடனோ அல்லது அவரைச் சார்ந்தவர்களுடனோ தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றால் மட்டுமே இணைவோம் என ஓபிஎஸ் கூறியிருந்தார். இது உடன்பாடு ஏற்படும்போது ஓபிஎஸ் கூறிய விஷயம்.
சசிகலாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் எதிர்த்துத்தான் தர்மயுத்தத்தை ஓபிஎஸ் நடத்தினார். அவருடைய பேட்டியை முழுமையாகப் பார்த்துவிட்டு பதிலளிக்கிறேன். அனுமானங்களுக்கு பதில் கூற முடியாது. பொதுக்குழுவே சசிகலாவை நீக்கிவிட்டது. அதில், ஒருங்கிணைப்பாளர் உட்பட அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். அனைவரும் அதற்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும்" என்றார்.