தமிழகம்

வருங்காலத்தில் பல இடங்களில் தடுப்பூசி சான்றிதழ் கேட்க வாய்ப்பு: புதுவை ஆளுநர் தமிழிசை சூசகம்

செ. ஞானபிரகாஷ்

வெளிநாடு செல்லும்போது தடுப்பூசி சான்றிதழ் கேட்கப்படுவதுபோல், வருங்காலத்தில் இன்னும் பல இடங்களில் கேட்கப்படலாம் என்பதால் மக்கள் தடுப்பூசி செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.

புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் முயற்சியாக இன்று ஒரு நாள் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார்.

சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அனைத்து மாநிலங்களிலும் தற்போது தொற்று சிறிது அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தொற்று அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் புதிய வகை தொற்று பரவத் தொடங்கியுள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியைத் தாண்டியுள்ளோம். இது வரலாற்றுச் சாதனை. அனைவரின் கூட்டு முயற்சியால் நடந்த சாதனையை பிரதமர் பாராட்டியுள்ளார். புதுவையும் இந்த வரலாறைப் படைக்க வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தடுப்பூசி விலையின்றி செலுத்தப்படுகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் இதுபோன்ற தடுப்பூசி திட்டம் விரைவாக வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும்போது தடுப்பூசி ஆவணம் கேட்கப்படுகிறது. வருங்காலத்தில் இன்னும் பல இடங்களில் சான்றிதழ் கேட்கப்படலாம். எனவே மக்கள் தடுப்பூசி செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதத்தினர் தடுப்பூசி போடாதவர்கள். தடுப்பூசி அதிகம் போட்டதால்தான் நாம் பயமின்றி விழாக்களைக் கொண்டாடுகிறோம். புதுவையில் தடுப்பூசி, பரிசோதனை, படுக்கை வசதி எதற்கும் தட்டுப்பாடுகள் இல்லை".

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT