போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்காக 1.36 லட்சம் இனிப்புபெட்டிகள் ஆர்டர் கிடைத்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடப் பணியை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொன்னேரி தாலுகாவுக்கு புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை, கடந்த ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில், பொன்னேரியில் ரூ. 3.06 கோடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. இந்தப் பணி 9 மாதங்களில் நிறைவடையும்.
தீபாவளிப் பண்டிகைக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஆவின் இனிப்பு வகைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அனைத்து அரசுத் துறைகளும், தங்களின் பணியாளர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமே கொள்முதல் செய்யவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்காக, ஒரு லட்சத்து 36 ஆயிரம் இனிப்பு பெட்டிகள் (தலா அரை கிலோ) ஆர்டர் வந்துள்ளது. பால் இனிப்பு வகைகளை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்துதொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதற்கான பணிகள் அம்பத்தூர் ஆவின் ஆலையில் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.