தமிழகம்

தமிழகத்தில் நகர்ப்புறங்களுக்கு இணைய சேவை வழங்கும் ‘தமிழ்நெட்’ பணிகள் நிறுத்திவைப்பு- பாரத்நெட் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுமா?

மனோஜ் முத்தரசு

நகர்ப்புறங்களுக்கு இணைய சேவை வழங்கும் தமிழ்நெட் திட்டத்தை, பாரத்நெட் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை கண்ணாடி இலை கம்பிவடம் (Optical Fiber cable) மூலமாக இணைத்து, அரசின் சேவைகளை அதிவேக அலைக்கற்றை வழியாக மக்களுக்கு வழங்க ‘பாரத் நெட்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் 2018-ல் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (பைபர்நெட் கழகம்) என்ற தமிழக அரசு பொது நிறுவனம் உருவாக்கப்பட்டது.

பாரத்நெட் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 388 வட்டாரங்களில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கு அதிவேக இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவும், மின்சாரம், நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சுற்றுச்சூழல், வனம், நகராட்சி நிர்வாகம், குடிநீர், வருவாய் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்படவும் தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

அதன்படி, கண்ணாடி இழைகம்பி வடமானது 43,004 கிலோமீட்டர் உயர்நிலைக் கம்பத்தின் மூலமாகவும், 6,496 கி.மீ. நிலத்தடி வழியாகவும் செல்ல உள்ளது.

முன்னதாக, பாரத்நெட் திட்டத்துடன் இணைந்து, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கும் கண்ணாடி இழை வடம் மூலம் அதிவேக அலைக்கற்றை வழங்க தமிழ்நெட் திட்டம் தொடங்கப்படும் என்று 2017-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதையடுத்து, பாரத்நெட், தமிழ்நெட் திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயார்செய்ய 2018-ல் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நெட் திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “அனைத்து ஊராட்சிகளுக்கும் இணைய சேவை கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் மத்திய அரசு பாரத்நெட் திட்டத்தைக் கொண்டுவந்தது.

நாட்டிலேயே முதல்முறையாக நகர்ப்புறங்களுக்கும் முழுமையாக இணைய சேவை கிடைக்கவேண்டும் என்று நோக்கில் தமிழ்நெட் என்ற முன்னோடித் திட்டம் அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது.

தற்போது பாரத்நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தும் தமிழக அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது.

இருந்தபோதிலும், பாரத்நெட்டுடன் நகர்ப்புறங்களை இணைக்கும் தமிழ்நெட் திட்டத்தையும் இணைந்து செயல்படுத்தினால் மட்டுமே அரசின் நோக்கம் முழுமையடைந்து, அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள்” என்றார்.

தமிழக ஃபைபர்நெட் கழக மேலாண் இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர் கூறும்போது, “பாரத்நெட் திட்டத்தை ஓராண்டுக்குள் முழுமையாக நிறைவுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நெட் திட்டம் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும். அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க, துறை ரீதியான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன”என்றார்.

பணிச்சுமை, செலவு குறையும்

ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, “பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த 12-க்கும் மேற்பட்ட துறைகள் இணைந்து பணியாற்ற உள்ளன. பாரத்நெட் திட்டம் முடிந்தபின்னர், தமிழ்நெட் திட்டத்தைத் தொடங்கினால், அனைத்து துறைகளையும் மீண்டும் ஒருமுறை இணைக்கவேண்டும். இதனால் திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படுவதுடன், கூடுதலாக செலவாகும். இரு திட்டங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. எனவே, ஒரே நேரத்தில் இரு திட்டங்களையும் செயல்படுத்தினால், பணிச்சுமை யுடன், செலவும் குறையும்” என்றனர்.

SCROLL FOR NEXT