ஸ்ரீரங்கம் மேலூரில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை சார்பில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது 105 டன் எடை கொண்ட இந்தச் சிலை, திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் உருவாக்கப்பட்டு, கடந்த மாதம் ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, சிலையை நிறுவுவதற்கு வலுவான பீடம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று காலை ராட்சத கிரேன் உதவியுடன் ஆஞ்சநேயர் சிலை, பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.வாசுதேவன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சிலையை நிறுவுவதையொட்டி நேற்று முன்தினம் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. அப்போது, பல இடங்களில் சேகரிக்கப்பட்ட புனித தீர்த்தங்கள், புண்ணியத்தலங்களில் சேகரிக்கப்பட்ட மணல் ஆகியவற்றுடன் புனிதப் பொருட்கள் அஸ்திவாரத்தில் இடப்பட்டன. ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ள அந்த வளாகத்தில் உள்ள சிறிய கோயிலில் ஏற்கெனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ராமர், சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளது.