நூறு கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதற்கு, ஆதியோகி சிலை முன்பு திரண்டு பிரதமருக்கு பாஜகவினர் நன்றி தெரிவித்தனர்.
கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில், இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சாதனை படைத்ததற்காக பிரதமர் நரேந்திரமோடியையும், மத்திய அரசையும் பாராட்டி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, பாஜக இளைஞர் அணியின் சார்பில், கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்கள், ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு, 100 கோடி தடுப்பூசி செலுத்தியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர். மேலும், 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 100 என்ற எண் வடிவில் அணிவகுத்து நின்றனர்.
இதைத் தொடர்ந்து, கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சாய்பாபாகாலனி அழகேசன் சாலையில் உள்ள ஒரு வீட்டில், அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பிரதமரின் மன்கீபாத் உரையை தொலைக்காட்சி ரேடியோ வழியாக கேட்டனர்.