புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 26 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்டாக் அறிவித்துள்ளது.
சென்டாக்கில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 10,684 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான மெரிட் லிஸ்ட் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டன.
இந்த நிலையில், அனைத்து பரிசீலனையும் முடிந்து இறுதிக் கட்ட மெரிட் லிஸ்ட் கடந்த 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதல்கட்டமாக கம்யூட்டர் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்களின் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு வெளியிட்ட உத்தரவில், "முதல்கட்ட கலை அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் மொத்தமுள்ள 4 ஆயிரத்து 260 இடங்களில் 4 ஆயிரத்து 170 இடங்களுக்ளு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்களுக்கான ஆணையை 25 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இடம் கிடைத்த கல்லூரியில் மாணவர்கள் வரும் 26 ஆம்தேதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்குள் ஒரிஜினல் சான்றிதழ்களுடன் சேர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.