புதுச்சேரியில் உள்ள மசாஜ் மையத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து 40 பேர் மீது போலீஸார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில், அழகுநிலையம், மசாஜ் சென்டர் (ஸ்பா) உள்ளிட்டவை பெயரில் பாலியல் தொழில் நடந்து வருகிறது. இந்தத் தொழிலில் வெளிமாநிலப் பெண்களோடு, உள்ளூர் பெண்களையும் ஈடுபடுத்தி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்தப் பாலியல் தொழிலில் உள்ளூர் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் வாடிக்கையாளாராகி உள்ளனர். இந்த விவகாரம் வெளியே வரத் தொடங்கிய நிலையில் புதுச்சேரி போலீஸார் சமீபத்தில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அண்ணாநகர், கோரிமேடு பகுதிகளில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதையடுத்து அப்பகுதியில் இயங்கி வந்த அழகு நிலையம், ஸ்பாவில் போலீஸார் சோதனை நடத்தி அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்களை மீட்டனர்.
புரோக்கர், வாடிக்கையாளர் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் இவர்களின் பெற்றோர், உறவினர்களை போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அண்ணாநகர் பகுதியில் உள்ள ஸ்பாவில் சிறுமி ஒருவர் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டது தெரியவந்தது. மேலும் பயிற்சிக்கு வந்த அவரை, ஸ்பா உரிமையாளர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின்பேரில் அச்சிறுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது 40 பேர் வரை ஸ்பாவில் அச்சிறுமியிடம் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 40 பேர் மீது உருளையன்பேட்டை போலீஸார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர்.
அச்சிறுமி வேலை செய்த ஸ்பாவுக்கு சீல் வைத்து உரிமத்தை நகராட்சி மூலம் ரத்து செய்த காவல்துறையினர் அங்கிருந்த செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஸ்பாவுக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் பட்டியல், செல்போன் எண்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ள நிலையில், அதனைக்கொண்டு அச்சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது யார் யார்? என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.