கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் ஆவின் மேம்பாலத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையை சீரமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படங்கள்: எஸ்.கே.ரமேஷ் 
தமிழகம்

விடுமுறை தினத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணியால் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: வெளியூர் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சென்னை, சேலம், பெங்களூரு செல்லும் வெளியூர் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.

கிருஷ்ணகிரி நகரைச் சுற்றி கன்னியாகுமரி - காஷ்மீர், கிருஷ்ணகிரி - சென்னை, கிருஷ்ணகிரி - புதுச்சேரி, கிருஷ்ணகிரி - குப்பம், ஓசூர் - பெங்களூரு என 5 தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் பகுதியில் ஆவின் மேம்பாலம் அமைந்துள்ளது.

குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் வாகனங்கள், பெங்களூருவில் இருந்து வரும் வாகனங்களும் இங்குள்ள சாலையில் பிரிந்து செல்கின்றன.

இதனிடையே ஆவின் மேம்பாலம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று ஆவின் மேம்பாலம் சர்வீஸ் சாலை, சீரமைக்கும் பணி நடந்தது. இதனால் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வாகனங்கள், அவதானப்பட்டி பிரிவு சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன.

இதன் காரணமாக சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும், ஆவின் மேம்பாலம் முதல்அவதானப்பட்டி பிரிவு சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. வாகனங்கள் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு மேல் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள், வெளியூர் செல்லும் பயணிகள் அவதியுற்றனர்.

இதுதொடர்பாக வெளியூர் பயணிகள் கூறியதாவது: பெங்களூரு, ஓசூரில் பணிபுரிபவர்கள் வாரவிடுமுறை நாட்களில் கார் உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஆவின் மேம்பாலம் அருகே சாலை சீரமைப்பு பணி நடைபெற்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சாலை சீரமைக்கும் பணிகளை வாகன போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் மேற்கொண்டிருந்தால், இதுபோன்ற தேவையற்ற சிரமங்களை தவிர்த்திருக்கலாம். இனிவரும் காலங்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாலை பணிகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT