தமிழகம் முழுவதும் 6-வது கட்டமெகா கரோனா தடுப்பூசி முகாம்50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மருத்துவமனை டீன் ஜெயந்தி,ஒருங்கிணைப்பு அதிகாரி ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தமாக 3.98 கோடி பேருக்கு (68 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசியும், 1.5 கோடி பேருக்கு (26 சதவீதம்) இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில் 100 கோடி தடுப்பூசி செலுத்திய நிலையில் மீண்டும் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவது வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தில் தொற்றின் 3-வதுஅலைக்கான அறிகுறிகள் இல்லை.ஆனாலும், ரஷ்யா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொற்றுஅதிகரித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பண்டிகை காலத்துக்குப்பின் தொற்று அதிகரித்துள்ளது. பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
டெங்குவை கட்டுப்படுத்த 21,930 பணியாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக தொடங்கப்பட்ட மரபணு பகுப்பாய்வு மையத்தில் தற்போது வரையிலும் 543 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதில் 43 டெல்டா வகை கரொனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.