பழநியில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை வெகுவிமரிசையாக நடை பெற்றது. அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பழநி பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 17 -ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் விரதம் இருந்து கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து தங்கள் ஊருக்கு வருவர். அங்கிருந்து பாத யாத்திரையாக தீர்த்தத்தை காவடியாக சுமந்து வந்து தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று பகல் 12 மணிக்கு தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி எழுத்தருளினார்.
தேரோட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், பழநி சார் ஆட்சியர் சு.வினித், கோயில் இணை ஆணையர் க.ராஜமாணிக்கம் டிஜஜி. கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சரவணன் ஆகியோர் வடம்பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கிரிவீதிகளை தேர் வலம் வந்தது. வழிநெடுகிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
பழநி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழநியில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.