புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் பல மாதங்களாக எரியாத ஹைமாஸ் விளக்குகளை சரி செய்யக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஹைமாஸ் விளக்கு கம்பத்தில் கண்ணீர் அஞ்சலி பேதாகை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. குறிப்பாக இங்குள்ள அருள் படையாட்சி வீதி, சபரி படையாச்சி வீதி, ஒத்தவாடை வீதி, ஸ்டென்ட் அந்தோன் ஸ்ட்ரீட், மீன் மார்க்கெட் சிக்னல், நெல்லித்தோப்பு சிக்னல் மடத்து வீதி ஆகிய இடங்களில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன.
இதனால் அப்பகுதியில் விபத்துக்களும், திருட்டு நடக்க கூடிய சூழ்நிலையும் உருவாக்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்குகளை உடனே சரிசெய்யக்கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் இதன்மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும், எரியாமல் உள்ள ஹமாஸ் விளக்குகளை உடனே சரிசெய்யக்கோரியும் இன்று (அக். 23) நெல்லித்தோப்பு சிக்னலில் உள்ள ஹைமாஸ் விளக்கு கம்பத்தில் ‘‘இந்த ஹைமாஸ் விளக்கு இறந்துவிட்டது அடக்கம் செய்ய நடவடிக்கை எடு’’ என்ற வாசகத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி பாதாகையை
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நெல்லித்தோப்பு கிளை சார்பில் வைத்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு செயலாளர் ரஜினி முருகன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெல்லித்தோப்பு தொகுதி குழு உறுப்பினர் ஜெயகுரு, இளைஞர் மன்றம் மெய்யழகன், ஜெரோம், நிஜந்தன், பிரவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தியுறுத்தினர்.