தமிழகம்

இரண்டாவது முறையாக தேசிய விருது: இறந்தும் வாழ்கிறார் கிஷோர்

எஸ்.நீலவண்ணன்

63வது தேசிய திரைப்பட விருது கள் டெல்லியில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் ‘விசாரணை’ படத்துக்காக சிறந்த படத் தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார் எடிட்டர் கிஷோர். கடந்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி ‘விசாரணை’ படத்தின் படத்தொகுப்பில் ஈடுபட்டி ருந்தபோதுதான் கிஷோர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள எடிட்டர் கிஷோரின் வீட்டுக்கு சென்றிருந்தோம். வீட்டின் வரவேற்பறையில் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலிடம் ‘ஆடுகளம்’ படத்தொகுப்புக்காக கிஷோர் தேசிய விருது பெறும் படம் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் கமல். ரஜினியுடன் கிஷோர் எடுத்துக்கொண்ட படங்களும், அவர் வாங்கிய விருதுகள் மற்றும் கேடயங்களும் அங்கிருந்த சுவரை அலங்கரித்திருந்தன. கிஷோரின் பெற்றோர்களான தியாகராஜன், பரமேஸ்வரி ஆகியோர், ‘தி இந்து’ விடம் கண்ணீர் மல்க கூறியதாவது:

எங்களுக்கு சத்தியபிரியா, பரணிபிரியா என்ற இரு மகள்களுக்கு பிறகு கடைக்குட்டியாக பிறந்தவர் கிஷோர். 10-ம் வகுப்பு வரை படித்த கிஷோர் எங்கள் உறவினர் மூலம் எடிட்டர் லான்ஸி மோகனிடம் உதவியாளராக சேர்ந்தார். லெனின் - வி.டி. விஜயனிடம் சில காலம் பணியாற்றிய கிஷோர், பின்னர் 74 படங்களில் எடிட்டராக பணியாற்றினார். ஒரு முறை ஏவிஎம் ஸ்டுடியோவில் கிஷோரை பார்க்கச் சென்றோம். கிஷோரைப் பார்க்க வேண்டும் என்று அங்குள்ளவர்களிடம் கேட்ட போது யாருக்கும் தெரியவில்லை. விளக்கிச் சொன்ன பிறகு, 'ஓ.. மிஸ்டர் கிளீனா' என்றனர். அவர் ‘மிஸ்டர் கிளீன்’ என்று பெயரெடுத்துள்ளது எங்களுக்கு அப்போதுதான் தெரியும்.

யாருடைய படத்தை ஒப்புக் கொண்டாலும், அந்தப் படத்தின் வேலையை முடிப்பதில் முழு அக்கறை காட்டுவார். ‘விஸ்வ ரூபம்’ படத்தில் பணியாற்ற கமல்ஹாசனே அழைத்தபோதும் கையில் நிறைய படங்கள் இருந்ததால் ஒப்புக்கொள்ள மறுத்தார். வளவனூரில் புதிய வீடு கட்டு வதற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால் வீடு கட்டுவதற்குள் மறைந்துவிட்டார்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ் திரைப்பட வசனகர்த்தாவான எம்.ஏ.கென்னடி கூறும்போது, “கிஷோர் பெரிய இயக்குநர், சின்ன இயக்குநர் என்று பிரித்துப் பார்க்க மாட்டார். படத்தொகுப்பில் இவரின் நேர்த்தியையும், அர்ப்பணிப்பையும், காணலாம். கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வார். இவரை நம்பி படத்தை ஒப்படைக்கலாம். புதிய இயக்குநர் ஒரு படத்தை குப்பையாக எடுத்து கொடுத்தாலும், படங்களில் சில காட்சிகள் வேண்டும் என்று கேட்டு எடுத்துவர சொல்லி அதை இணைத்து அந்த இயக்குநருக்கு வாழ்க்கை கொடுப்பார். இது தயாரிப்பாளருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வார். நடிகர்களில் சிவக்குமாரையும், டெக்னிஷியன்களில் கிஷோரையும் ‘மிஸ்டர் கிளீன்’ என்று சொல்லலாம்.

பார்ட்டிகள், பப்களுக்கு செல்லமாட்டார். 24 மணி நேரமும் பட வேலைகளில் ஈடுபட்டதால் அவருக்கு மன அழுத்தம் அதிகமாகியது. அவரின் தொழில் பக்திக்காகவே இந்த விருது கிடைத்துள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT