மழலையர், நர்சரி பள்ளிகளைத் திறக்கும் முடிவு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையும் வெளியாகியுள்ளது.
கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முழுமையாகப் பள்ளிகள் திறக்கப்படாத சூழல் உருவானது. இந்தச் சூழலில் தொற்றின் பரவல் குறைந்ததால், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்.1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது.
கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வந்தது. இது தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாததால் மன ரீதியாக அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே. அனைத்துப் பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வந்தனர். எனினும் மூன்றாம் அலை அச்சம் காரணமாக இந்த முடிவைத் தமிழக அரசு தள்ளிவைத்தது. இந்த நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும், மழலையர்களுக்கான நர்சரி பள்ளிகளும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் இயங்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் மழலையர்களுக்கான பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், “தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளைத் திறக்கும் முடிவு தற்போதைக்கு இல்லை. மழலையர் பள்ளிகளைத் திறப்பது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.