கடந்த இரண்டு வருடத்தில் குழந்தைகளின் கல்வி சிதைந்து போய்விட்டது. இந்தத் தலைமுறை, கல்வியைக் காணாத தலைமுறை ஆகிவிடுமோ என்ற அச்சத்திலேயே பள்ளிகளைத் திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று (அக் 23) நடைபெறும் ஆறாவது தடுப்பூசி சிறப்பு முகாமை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டுப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “ தமிழகத்தில் கரோனா பரவல் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சுமார் 73 சதவீத நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முகாமில் இரண்டாம் தவணை தடுப்பு செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வி ஆண்டில் தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசவுள்ளேன்.
கடந்த இரண்டு வருடத்தில் குழந்தைகளின் கல்விக் கனவு சிதைந்து போய்விட்டது. இந்தத் தலைமுறை, கல்வியைக் காணாத தலைமுறை ஆகிவிடுமோ என்ற அச்சத்திலேயே பள்ளிகளைத் திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அனைத்துப் பள்ளிகளிலும் எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.