தமிழக விளையாட்டு விடுதிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் நியமனம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ், தமிழகத்தில் 27 விளையாட்டு விடுதிகள், 2 முதன்மை விளையாட்டு விடுதிகள், ஆண்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதிகள் 3-ம், பெண்களுக்கு 2 விடுதிகளும் உள்ளன. 12 சிறப்பு விளையாட்டு அகாடமிகள் உள்ளன. இதில், 1,200 வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுகின்றனர். இந்த விடுதிகளில் ஆண்டுதோறும் 1,975 பேர் தகுதி அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உடலில் அதிக சிரமங்களும், அழுத்தமும் ஏற்படுகிறது.
விளையாடும்போது உடல் தசைகள், எலும்பு மூட்டு இணைப்புகளில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.விளையாட்டு விடுதி வளாகங்களில் ஆடுகளம் மற்றும் பயிற்சிக்கான வசதிகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் வீரர்களின் உடல் திறனைப் பராமரிக்கும் பிசியோதெரபிஸ்ட்களும் முக்கியம். ஆனால், மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் நியமிக்கப்படவில்லை. அதனால், வீரர், வீராங்கனைகள் முழு தகுதியுடன் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட்கள், தமிழ்நாடு கிளை தலைவர் வெ. கிருஷ்ணகுமார் கூறியதாவது:
சென்னை, கோவை, மதுரைபோன்ற பெரிய நகரங்களில் போட்டிகள் நடக்கும்போது ஸ்பான்சர் மூலம்பிசியோதெரபிஸ்ட்களை நியமித்துவீரர்களுக்கு சிகிச்சை வழங்குகின்றனர். ஆனால், அரசு சார்பில் இதுவரை பிசியோதெரபிஸ்ட்கள் நியமிக்கப்படவில்லை. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானது விளையாட்டு மேம்பாடு தொடர்பான மருத்துவத்தை தொடங்குவதாகும்.
பிசியோதெரபி என்பது தசை உடற்கூறியல், உடலியல் மற்றும் நியூரோ சைன்ஸ் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சிகிச்சை வழங்கும் முறையாகும். உடலில் எந்த தசையில் காயம் ஏற்பட்டாலும், எலும்பு மூட்டு இணைப்புகளில் வலிஉண்டானாலும், தனது முழு உடல்பலத்தையும் ஒருவரால் விளையாட்டுகளில் பயன்படுத்த முடியாது, இத்தகைய பிரச்சினைகளோடு விளையாடினால் காயம் மேலும் மோச மாகும்.
பிசியோதெரபியின் பங்கு முக்கியம்
மாநில அளவில் சிறந்து விளங்கும் வீரர்களை உருவாக்கினால்தான், அவர்களால் சர்வதேசப் போட்டிகளில் வெல்ல முடியும். அதற்குசரியான உடல்தகுதி அவசியம்.
உடற்பயிற்சிகளை தனது பிரதான மருத்துவ முறையாகக் கொண்டுள்ள ஒரே துறை பிசியோதெரபி துறைதான். விளையாட்டில் காயமடையும் வீரர்களை விரைவில் மீட்டெடுக்க பிசியோதெரபி மருத்துவத்தின் பங்கு முக்கியமானது.
தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் பிசியோதெரபிஸ்ட்களை கட்டாயம் நியமிக்க வேண்டும். சுவீடன் போன்ற நாடுகளில் பள்ளி அளவிலேயே பிசியோதெரபிஸ்ட்களை நியமிக்கின்றனர். இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விளையாட்டு விடுதிகள் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் பிசியோதெரபிஸ்ட்கள் உள்ளனர். தேவைப்பட்டால், அவர்களை மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்குஅழைத்துக் கொள்வோம்.விளையாட்டு விடுதிகளில் போதிய பயிற்சியாளர்கள் இல்லாமலேயே வீரர்கள்சிரமம் அடைகின்றனர். அனைத்துவிடுதிகளிலும் பிசியோதெரபிஸ்ட்களை நியமிக்க அவசியம் இல்லாததால் நியமிக்கவில்லை’’ என்றார்.