தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘இ-முன்னேற்றம்’ மற்றும் ‘தகவல் தொழில்நுட்ப நண்பன்’ ஆகிய இரு இணையதளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, ரூ.1 லட்சம் கோடிக்கான 200 முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணித்து வருகிறது. இந்த திட்டங்களின் வளர்ச்சிகளை மீளாய்வு செய்து, அவற்றைக் கண்காணிக்க,‘இ-முன்னேற்றம்’ என்ற இணையதளத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.
இதில் திட்ட விவரங்கள், பணி ஒப்பந்த நாள், தொடங்கப்பட்ட நாள், நடைபெறும் இடம், நிதி நிலைமை, மாதாந்திர வளர்ச்சி உள்ளிட்ட விவரங்கள், புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். மேலும், அரசுத் துறைகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்க இயலும்.
அதேபோல, தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நண்பன் என்ற வலைதளம், தகவல் தொழில்நுட்பவியல் தொழில்கள் குறித்த கருத்துகேட்புத் தளமாக விளங்குவதுடன். அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த குழுமங்கள் இதில் இணைந்து, கொள்கைகளை உருவாக்க அவர்களது பங்களிப்பை அளிக்க உதவும்.
இந்த தளத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறையால் வெளியிடப்படும் அரசாணைகள், ஒப்பந்தப் புள்ளிகளைப் பார்வையிட முடியும்.
மேலும், முக்கியப் பிரச்சினைகள், தற்போதைய கொள்கைகள் குறித்து கருத்துகளைப் பதிவிடும்வசதி, அதற்கான தீர்வுகளையும் மின்னஞ்சல் வழியாக பெறலாம்.எளிதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் உள்ள இந்த வலைதளம் வர்த்தகத்தைப் பெருக்க துணை புரியும்.
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் இணை கல்விக் கழகத்தால் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள ‘கணினி விசைப்பலகை’ மற்றும் `தமிழிணையம் ஒருங்குறி மாற்றி'ஆகிய இரு தமிழ் மென்பொருள்களும், புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு `கீழடி- தமிழிணைய விசைப்பலகை’ மற்றும் ‘தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி’என்று பெயர் மாற்றம் செய்யப்பட் டுள்ளன.
கீழடி-விசைப்பலகை `தமிழ் 99 விசைப்பலகை, ஒலிபெயர்ப்பு விசைப்பலகை, பழைய தட்டச்சு விசைப்பலகை' ஆகிய 3 விதமான கணினி விசைப்பலகைகளின் அமைப்பில் செயல்படும்.
இலவசமாக பதிவிறக்கலாம்
`தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி மென் பொருள்' வானவில்மற்றும் பிற இணைய தமிழ் எழுத்துருகளில் தட்டச்சு செய்யப்பட்ட உரைநடை, கோப்பு, ஆவணங்களை தேவைக்கேற்ப மாற்ற உதவும். இந்த மென்பொருள்களை தமிழ் இணைய கல்விக் கழக இணையதளத்தில் இருந்து இலவசமாகப் (www.tamiluniv.org/uincode) பதிவிறக்கம் செய்யலாம். இந்த மென்பொருள்களின் செயல்பாடுகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் த.மனோதங்கராஜ், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறைச் செயலர் விக்ரம்கபூர், மின் ஆளுமை முகமை ஆலோசகர் பி.டபிள்யூ.சி.டேவிதார், இயக்குநர் கே.விஜயேந்திர பாண்டியன், இணை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் நீரஜ் மித்தல், தமிழ் இணைய கல்விக் கழக இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற் றனர்.