தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் கடந்த அக். 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றன.
கடந்த 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்வெற்றி பெற்றவர்கள் கடந்த20-ம் தேதி நடைபெற்ற முதல்கூட்டத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஊராட்சி மற்றும்ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கான தலைவர்கள், துணைத் தலைவர்கள், கிராம ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று நடைபெற்றது. இதில் போட்டிஇல்லாத இடங்களில் தலைவர், துணைத் தலைவர்கள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டனர்.
இருவர் போட்டியிடும் இடங்களில் தேர்தல் நடத்தி, அதிகவாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்ற இடங்களில், இருவரது பெயரையும் எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டன.
தேர்தல் தள்ளிவைப்பு
மறைமுக தேர்தலுக்கான கூட்டம் தொடங்கியதில் இருந்து 30 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, பாதிக்கு மேல் உறுப்பினர்கள் வராத உள்ளாட்சிகள், மோதல்கள் ஏற்பட்ட உள்ளாட்சிகளில் மறைமுக தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்த மறைமுக தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுக கூட்டணிகளே கைப்பற்றின.
திமுக - அதிமுக பரஸ்பர ஆதரவு
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக உறுப்பினர்கள் ஆதரவுடன், தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது. நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில், வெற்றி பெற்ற உறுப்பினர்களை பவுன்சர்கள் பாதுகாப்புடன் கார்களில் அழைத்து வந்து வாக்களிக்க வைத்து, தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது.