கனகராஜ் 
தமிழகம்

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரணம் குறித்து உறவினர்களிடம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மர்ம கும்பல் நுழைந்து, ஆவணங்கள், பொருட்களை கொள்ளையடித்து விட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2017-ம்ஆண்டு ஏப்.27-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்தனகிரி பகுதியில் சாலை விபத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார்.

இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று முக்கிய குற்றவாளியான சயான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, கோடநாடு வழக்கில் ஆரம்பத்தில் இருந்து போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்கிஉள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால், தனதுதம்பி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சேலம் எஸ்பிஅபிநவ், கனகராஜ் மரண வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டார். விசாரணைஅதிகாரியாக ஆத்தூர் டிஎஸ்பிராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுஉள்ளார். கனகராஜ் உயிரிழந்தது தொடர்பாக நேற்று (22-ம் தேதி)மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது.

ஆத்தூர் அருகே சக்தி நகரில் வசித்து வரும் கனகராஜின் உறவினர் ரமேஷ் வீட்டுக்கு, நேற்று காலை 20-க்கும் மேற்பட்ட போலீஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர். ரமேஷ், அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் கனகராஜ் குறித்தும், அவர் உயிரிழந்தது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி எஸ்பி ஆசிஷ்ரவாத் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆத்தூரில் முகாமிட்டு கனகராஜ் மரணம் குறித்தும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது சகோதரர் தனபால் மற்றும் வழக்குக்கு சம்பந்தமான நபர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT