தமிழகம்

கூடலூர் அருகே கூண்டுக்குள் சிக்காமல் திரியும் புலி: வனத் துறையினர் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

கூடலூர் வுட் பிரையர் எஸ்டேட் தொழிலாளியை கொன்ற புலி அதே பகுதியிலேயே நடமாடி வருகிறது. ஆனால் கூண்டில் சிக்காததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை வுட் பாரியர் எஸ்டேட் தொழிலாளி மது ஓரன் என்பவரை புலி ஒன்று தாக்கி கொன்றது. புலியைப் பிடிக்க வுட் பிரையர் எஸ்டேட்டில் 8 கூண்டுகள் மற்றும் 30 கண் காணிப்பு கேமராக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதிரடிப்படை, வனத்துறை மற்றும் ஆயுதப்படை பிரிவு போலீஸார் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் தொழிலாளியை கொன்ற பகுதியில் வைக்கப்பட்டுள்ள 18 கேமராக்களில் 7 கேமராக்களில் புலியின் நடமாட்டம் பதிவானதால், விரைவில் சிக்கிவிடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். வனத்துறையினர் மிகுந்த ஆர்வத்துடன் நேற்று காலை கூண்டுகள் மற்றும் கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால், கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகவில்லை.

கூடலூர் வன அலுவலர் எஸ்.என்.தேஜஸ்வீ கூறும்போது, ‘‘இரவில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 மரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலியின் நடமாட்டம் உள்ளபோதும், அது கூண்டில் சிக்கவில்லை. அதன் புதிய கால் தடங்கள் கிடைத்துள்ளன’’ என்றார்.

வனத்துறையினர் கூறும்போது, ‘‘காலில் காயம் ஏற்பட்டதால், வேட்டையாட முடியாமல் தொழிலாளியை புலி கொன்றுள்ளது. எனவே, புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அதன் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்க வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கால்நடை மருத்துவர் விஜயராகவன், பிராயா ஆகியோர் வுட் பிரயைர் எஸ்டேட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். புலி தென்படும்போது, அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும். தொழிலாளியை கொன்ற புலி சுமார் 20 கிலோ வரை மாமிசத்தை புசித்திருக்கும். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக சாப்பிடாததால், மீண்டும் இரை தேடி வரும். கூண்டில் வைக்கப்பட்டுள்ள ஆடுகள் மற்றும் மாமிசம் புலியை ஈர்க்கும். இதனால் புலி பிடிபடும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT